பிறந்த 10 மாதத்திலிருந்து தினமும் 10 மணி நேரம் டயாலிசிஸ் செய்த
ஓமன் நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு
ஒரே நேரத்தில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை செய்து ரேலா மருத்துவமனை சாதனை
சென்னை, மார்ச் 29-
ஓமன் நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து (சென்னை, குரோம்பேட்டை) ரேலா பன்னோக்கு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
அந்த சிறுமிக்கு கல்லீரலில் பிரச்சினை இருந்தது. அதேசமயம் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் ஹைபராக்ஸலூரியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு தீர்வாக ஒரே சமயத்தில் அந்த சிறுமிக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு இம்மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பேராசிரியர் முகமது ரேலா பரிந்துரைத்தார். எனவே கல்லீரலை அந்த சிறுமியின் மாமாவும், சிறுநீரகத்தை அவரது தாயாரும் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு இந்த 2 அறுவை சிகிச்சைகளும் 10 மணி நேரம் செய்யப்பட்டது.
சிறுமி லுஜ்ஜைன் 10 மாத குழந்தையாக இருக்கும்போதே அவருக்கு கல்லீரலில் ஒரு நொதி குறைபாடு காரணமாக ஹைபராக்ஸலூரியா என்னும் நோய் இருப்பது தெரிய வந்தது. இந்த நோய் காரணமாக அவருக்கு உடல் முழுவதும் இருதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் கண்களில் ஆக்சலேட் கற்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தினந்தோறும் 10 மணி நேரம் செய்யப்பட்டது. இந்த சிறுமி உயிர் வாழ கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ரேலா மருத்துவமனை பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் இந்த சிறுமி அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு 3 வயது 3 மாதம் ஆகும். அவரது உடல் எடை 8.2 கிலோவாக இருந்தது. இந்த வயதிற்கு இது மிகவும் குறைவான எடையாகும். சிறுநீரக குறைபாடு காரணமாக அவரது வளர்ச்சியும் தடைபட்டிருந்தது. அந்த சிறுமியின் எடை 10 கிலோவிற்கு வந்த பின் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ரேலா மருத்துவமனை தீர்மானித்தது. அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ எடை இருக்க வேண்டும். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் குழந்தையின் குடும்பத்தினருடன் கலந்துரையாடி உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்த 2 அறுவை சிகிச்சைகளும் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது இச்சிறுமி 9 கிலோ எடை கூடி ஆரோக்கியமாக உள்ளார்.
இது குறித்து ரேலா மருத்துவமனையின் தலைவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனரும் பேராசிரியருமான முகமது ரேலா கூறுகையில், இது போன்ற ஒருங்கிணைந்த கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக செய்ய, அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தையும் தாண்டி கூடுதலாக, குழந்தை மருத்துவ ஐ.சி.யூ மேலாண்மை நிபுணத்துவம், இன்னும் பல பராமரிப்பு முறைகள் மிகவும் முக்கியம் ஆகும். இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இந்தியாவிலேயே மிக அனுபவம் வாய்ந்த சிறந்த நிபுணர் குழு எங்கள் மருத்துவமனையில் உள்ளது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து இம்மருத்துவமனையின் கல்லீரல்-கணையம்-பித்தநீர் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகரும், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோமதி நரசிம்மன் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் சிறுநீரக நன்கொடையாளர் கிடைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். பெரியவர்களின் சிறுநீரகம் சற்று பெரிதாக இருக்கும். குழந்தையின் அடிவயிற்று பகுதி சிறிதாக இருக்கும். இதன் காரணமாக அந்த குழந்தையின் தாயின் சிறுநீரகத்தை பொருத்துவது என்பது எங்களுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. மேலும் அந்த குழந்தையின் எடையும் குறைவாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பெரியவர்களின் சிறுநீரகத்தில் ஒரு மணி நேரத்தில் அரை லிட்டர் ரத்த ஓட்டம் இருக்கும். குழந்தையின் ரத்த நாளங்கள் மிகவும் சிறியவை பெரியவர்களின் சிறுநீரகத்திலிருந்து வரும் ரத்த ஓட்ட அழுத்தத்தை நிர்வகிப்பது சிரமம் ஆகும். அதேசமயம் ஒரு குழந்தையின் முழு உடலிலும் அரை லிட்டர் ரத்த ஓட்டம்தான் ஒரு மணி நேரத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து இம்மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் சண்முகம் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவி ஆகியோர் கூறுகையில், இந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய காலகட்டத்தில் பல சவால்கள் இருந்தது. ஏனெனில் அவர் 10 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து பெரிட்டோனியல் டயாலிசிஸ் செய்து வந்தார். இதன் காரணமாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, எலும்பு பலவீனம் மற்றும் அவரது வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருந்தார். இதன் காரணமாக அந்த குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து, தொற்று கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம் என்று தெரிவித்தனர்.
இது குறித்து அந்த குழந்தையின் தாயார் கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை ஒவ்வொரு நாளும் டயாலிசிஸ் செய்வதில் இருந்து விடுபட்டதைப் பார்த்து நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது அவள் எந்தவித வலியும் இல்லாமல் அனைவரையும் போல் சகஜமாகவும் மகிழ்ச்சியாகவும் செயல்படுகிறாள். எங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களைச் சந்திக்க நாங்கள் ஓமனுக்குத் திரும்புவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம் என்று தெரிவித்தார்.
The Hindu
The New Indian Express
The Times of India